இராமேஸ்வரம்-இலங்கை இடையே விரைவில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படுமென தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
இந்திய ரூபாய் 4 கோடியே 19 லட்சம் இந்திய ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக அலுவலகத்தை திறந்து வைத்து கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”இந்த புதிய துறைமுக அலுவலகம் திறக்கப்பட்டதன் நோக்கம் இராமேஸ்வரம்- தலைமன்னார் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையினை ஆரம்பிப்பதாகும்.
இந்திய மதிப்பில் 118 கோடி ரூபாய் செலவில் குறித்த கப்பல் போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதிக்கு பின்னர் சாகர்மாலா திட்டத்தின் கீழ் ராமேஸ்வரம்- தலைமன்னார் இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும்” இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

















