பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி, 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மேற்கிந்திய தீவிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மூன்று வகையிலான கிரிகெட் தொடர்களிலும் விளையாடி வருகின்றது. முன்னதாக 3 போட்டி கொண்ட ரி20 தொடரை பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அத்துடன் முதலாவது ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் அணி ஏற்கனவே வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று டிரினிடாடில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச்சினைத் தெரிவு செய்திருந்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 37 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இதன்போது மழை குறுக்கிட்டதன் காரணமாக இரண்டாவது இன்னிங் ஆரம்பமாவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.
இதையடுத்து, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி மேற்கிந்திய தீவுகள் அணக்கு 35 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்டதுடன் வெற்றி இலக்காக 181 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி தடுமாறிய போதும் 6-வது விக்கெட்டுக்கு ரோஸ்டன் சேஸ், ஜஸ்டின் கிரீவ்ஸ் ஜோடி இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில், மேற்கிந்திய தீவுகள் அணி 33.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்றுகொண்டது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

















