13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான Countdown நிகழ்வு மும்பையில் நடைபெற்றது.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 30ம் திகதி முதல் நவம்பர் 2ம் திகதி வரை இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 50 நாட்களே உள்ள நிலையில் கவுன்ட் டவுன் நிகழ்வு நேற்று மும்பையில் இடம்பெற்றது.
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் இந்தியாவில் மகளிர் உலகக் கோப்பை இடம்பெறுவது இது 4-வது முறையாகும்.
இதில் இலங்கை, இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து,இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் முடிவில் முதல் 04 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இத்தொடருக்கான 50 நாள் ‘கவுன்ட் டவுண்’ நேற்று ஆரம்பாகியது. இதற்காக மும்பையில் நடந்த கோப்பை அறிமுக விழாவில் ஐ.சி.சி., தலைவர் ஜெய் ஷா, இந்திய அணியின் முன்னாள் சகலதுறை வீரர் யுவராஜ் சிங், இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, முன்னாள் அணித்தலைவி மிதாலி ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெண்கள் உலக கோப்பையை இந்தியா இதுவரை வென்றதில்லை. 2017ல் இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த யுவ்ராஜ்சிங் கருத்து தெரிவிக்கையில் ”உலக கோப்பை போட்டிகளில் நெருக்கடி அதிகம் இருக்கும். எளிதாக வெல்ல முடியாது. அனுபவமும் தன்னம்பிக்கையும் இருந்தால் சாதிக்கலாம். நாட்டுக்காக வெற்றி பெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் விளையாட வேண்டும். கிரிக்கெட்டில் வரலாறு படைக்க நமது வீராங்கனைகளுக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.



















