இன்று (01) முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் சீட் பெல்ட் (ஆசனப் பட்டிகள்) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட முடிவை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய வீதிகள் பாதுகாப்பு சபை தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போது சீட் பெல்ட்கள் பொருத்தப்படாத சில வாகனங்களில் அவற்றைப் பொருத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 31 அன்று, அதிவேக நெடுஞசாலைப் பேருந்துகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கும் விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதற்கிடையில், ஆகஸ்ட் 30 அன்று, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரும், சபைத் தலைவருமான பிமல் ரத்நாயக்க, இந்த முயற்சி “க்ளின் ஸ்ரீலங்கா” திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக செயல்படுத்தப்படுகிறது என்று விளக்கினார்.














