செவ்வாயன்று கட்டார் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி ஹமாஸின் அரசியல் தலைவர்களைக் கொல்ல இஸ்ரேல் முயன்றதுடன், மத்திய கிழக்கில் அதன் இராணுவ நடவடிக்கையை அதிகரித்தது.
தாக்குதல் குறித்து பதிலளித்துள்ள வொஷிங்டன், இது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நலன்களை முன்னேற்றாத ஒருதலைப்பட்ச தாக்குதல் என்று விவரித்துள்ளது.
இஸ்ரேலிய தாக்குதலினால் தான் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், புதன்கிழமை (10) இந்த விவகாரம் குறித்து முழு அறிக்கையை வெளியிடுவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸைத் தாக்குவது ஒரு தகுதியான இலக்காகக் கருதுவதாக ட்ரம்ப் கூறினார்.
ஆனால் இந்தத் தாக்குதல் வளைகுடா அரபு நாட்டில் நடந்ததைக் கண்டு அவர் வருத்தப்பட்டார்.
கட்டார் வொஷிங்டனின் முக்கிய நேட்டோ அல்லாத நட்பு நாடாகும், பாலஸ்தீன இஸ்லாமியக் குழு நீண்ட காலமாக அதன் அரசியல் தளத்தை அங்கு கொண்டுள்ளது.
இதனிடையே தாக்குதல் குறித்து வருத்தம் வெளியிட்டுள்ள கட்டார் பிரதமர் ஷேக் மொஹமட் பின் அப்துல்ரஹ்மான், வான்வழித் தாக்குதல்கள் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே கட்டார் மத்தியஸ்தம் செய்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தடம் புரளச் செய்யும் என்று கூறினார்.
இந்தத் தாக்குதலுக்கு சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளன.
மேலும் காசா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளையும், கிட்டத்தட்ட இரண்டு வருட கால மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் முடிவு காண ட்ரம்பின் முயற்சியையும் இது தடம் புரளச் செய்யும் அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கட்டார் அமெரிக்காவின் பாதுகாப்புப் பங்காளியாகும்.
மேலும் மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க இராணுவ தளமான அல்-உதெய்த் விமானத் தளத்தை நடத்துகிறது.
காசாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் எகிப்துடன் இணைந்து மத்தியஸ்தராகச் செயல்பட்டது.
ஹமாஸின் நாடுகடத்தப்பட்ட காசா தலைவரும் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளருமான கலீல் அல்-ஹய்யாவின் மகன் உட்பட, தனது ஐந்து உறுப்பினர்கள் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கூறியது.
தாக்குதல் நடப்பதற்கு சற்று முன்பு அமெரிக்க இராணுவத்திடமிருந்து தாக்குதல் குறித்து ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை வந்தது என்று அமெரிக்க ஜனாதிபதி முன்னதாக சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
எனினும், அமெரிக்க இராணுவத்திற்குத் தெரிவித்தது இஸ்ரேல்தானா என்று அவர் கூறவில்லை.















