பணி சார்ந்து AI செயலிகளை பயன்படுத்தி வந்த இளம் தலைமுறையினர் தற்போது தங்களின் தனிப்பட்ட உளவியல் பிரச்சினைகளுக்கும் அதனை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
ஆனால், இது பலனளிக்குமா? அல்லது ஆபத்தில் முடியுமா? மனநலன், உறவுகள் சார்ந்த பிரச்சினைகளுக்கு AIயின் உதவி பெறுவது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?
AIயின் வளர்ச்சிக்குப் பின்னர் பெரும்பாலானோர் தங்கள் அன்றாட வாழ்வில் AIஐ பயன்படுத்தி வருகின்றனர். அதில், உளவியல் தொடர்பான பயன்பாடும் அடங்குகிறது.
பெரும்பாலும் உடனடித் தீர்வைத் தேடியே AI செயலிகளை இளைஞர்கள் நாடுகின்றனர் என துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து மனநல ஆய்வாளர்கள் கூறும்போது, இளைஞர்கள் பெரும்பாலும், நேர மேலாண்மை, காதல் பிரச்னைகள், வேலையில் கவனக்குறைவு போன்ற காரணங்களுக்காக AIசெயலிகளை பயன்படுத்துகின்றனர். சில சமயங்களில் அது உண்மையில் உதவியாகவும் இருக்கும் என்கின்றனர்.
அவ்வாறு AI யின் உதவியை நாட காரணம் என்ன?
உலகம் இணையத்தால் இணைந்திருந்தாலும், தனிமை இன்னும் ஒரு பெரிய பிரச்னையாகவே உள்ளது.
ஆனாலும் இளைஞர்கள் AIயை நாடுவதற்கு காரணம் தனிமை மட்டும் அல்ல.
நினைத்ததை எந்தத் தயக்கமுமின்றி AIயிடம் பகிர முடிகிறது.
அது உடனடியாக உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படுகிறது. அதனால் AIயை பயன்படுத்துபவர்கள் அவர்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள்.
இங்கு கட்டணமும் ஒரு முக்கிய விஷயமாக உள்ளது. நாம் ஏதேனும் ஒருவிடயத்தினை தெரிந்துகொள்ளவோ, அல்லது நமது பிரச்சினைக்கு உளவள ஆலோசனை பெறவோ துறை சார்ந்தவர்களை அணுகுவதற்கு கட்டணம் தேவைப்படுகிறது. ஆனால் AIயிடம் ஆலோசனை பெற கட்டணம் தேவையில்லை.
ஆறுதலாக பேசுவது, நாம் செய்வதை சரி என கூறுவது நமக்கு எப்போதும் பிடித்தமானதாக இருக்கும் அல்லவா? பெரும்பாலனவர்கள் AIயை நாடுவதற்கும் இது ஒரு காரணமாக உள்ளது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
AIசெயலிகள் எப்போதும் உங்கள் உணர்ச்சிகளை சரி என்றே கூறும். ஆனால் மனநல ஆலோசகர் உங்களது சிந்தனைகளை சவாலுக்குள்ளாக்கி, புதிய கோணத்தில் அணுக கற்றுக் கொடுப்பர்.
எனவே உணர்வு சார்ந்த விடயங்களிலோ, மனநலன், உறவுகள் சார்ந்த விடயங்களிலோ AIயின் ஆலோசனை பெறுவது பொருத்தமானதாக அமையாது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.















