அதிபர் சேவையிலும், பொது சேவையின் பல துறைகளிலும் காணப்படுகின்ற சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த ஆண்டு சம்பள நிர்ணய ஆணைக்குழுவை நிறுவவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் ஆரம்பமாகியிருந்ததுடன் சபையில் உரையாற்றியிருந்த பிரதமர் ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்திருந்தார்.
அதிபர் சேவையில் உள்ள சம்பள ஏற்றத்தாழ்வுகள் தொடர்பாக அதிபர் ஆசிரியர் சங்கங்கள் மற்றும்
பாடசாலை அதிபர்கள் மத்தியில் நீண்ட விவாதங்கள் நடந்துள்ளன. இந்த ஏற்றத்தாழ்வு தொடர்பாக நாங்கள் தொடர்ந்து விவாதித்து தீர்வு காண முயற்சிக்கிறோம். அரசாங்கக் கொள்கையாக,
இந்த ஆண்டு சம்பள நிர்ணய ஆணைக்குழு நியமிக்கப்பட உள்ளது. அந்த சம்பள ஆணைக்குழுவின் மூலம்தான் நிலையான தீர்வை வழங்க முடியும்.
சமீபத்திய சம்பள உயர்வுகளுடன், கல்வித் துறையில் மட்டுமல்ல,பல துறைகளிலும் நெருக்கடிகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுள்ளன, இதற்கு ஒரு நிலையான தீர்வு தேவை, எனவே சம்பள நிர்ணய ஆணைக்குழு மூலம் இதற்கு ஒரு தீர்வைக் காண நாங்கள் முயற்சி செய்கிறோம். அதிபர்களின் பிரச்சினைகள் தொடர்பான திட்டங்களை சம்பள ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.













