முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் நான்கு குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக 97 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமாகச் சம்பாதித்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை ஒக்டோபர் 15 ஆம் திகதி விசாரணைக்கு முந்தைய கலந்தாலோசனைக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (01) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் அழைக்கப்பட்டபோது, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் பிற பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
2020 ஆகஸ்ட் 13 முதல் 2024 ஜூன் 24 வரையிலான காலகட்டத்தில், கெஹெலிய ரம்புக்வெல்ல வெகுஜன ஊடகம், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக பணியாற்றியபோது, சட்டவிரோதமாக ரூ. 97 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களைச் சம்பாதித்ததாகக் கூறி, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கில் பெயரிடப்பட்ட பிரதிவாதிகளில் அவரது மனைவி குசும் பிரியதர்ஷனி எபா, மகள்கள் சமித்ரி ரம்புக்வெல்ல, சந்துலா ரம்புக்வெல்ல, அமலி ரம்புக்வெல்ல மற்றும் மருமகன் இசுரு புலஸ்தி பண்டார பொல்கஸ்தெனிய ஆகியோர் அடங்குவர்.














