அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம் சர்வதேச ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில்அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற உலக சாதனையை விராட் கோலி தம்வசப்படுத்தியுள்ளார் .
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இறுதி போட்டி சிட்னியில் இன்று(25) நடைபெற்றது.
இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 46.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 236 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனையடுத்து 237 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பாடிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா – விராட் கோலி ஆகியோர் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வெற்றிக்கு வழிவகுத்தனர்.
38.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 237 ஓட்டங்கள் பெற்று இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் ரோஹித் சர்மா 121 ஓட்டங்களுடனும், விராட் கோலி 74 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்த போட்டியில் பெற்றுக்கொண்ட 74 ஓட்டங்களுடன் சர்வதேச ஒருநாள் மற்றும் T20 போட்டிகள் கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை 18,443 ஓட்டங்களை குவித்துள்ளார்.
இதன் மூலம் போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற உலக சாதனையை தம்வசப்படுத்தியுள்ளார்.
முன்னதாக சச்சின் டெண்டுல்கர் 18,436 ஓட்டங்களைப் பெற்று அதிகபட்சமாக ஓட்டமாக பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



















