ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக தனது பாதுகாப்பை வலுப்படுத்த கெய்வ் முயற்சித்து வரும் நிலையில் திங்களன்று (17) பிரான்ஸுக்கும், உக்ரேனுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், அடுத்த 10 ஆண்டுகளில் உக்ரேன் 100 பிரெஞ்சு தயாரிப்பான ரஃபேல் போர் விமானங்களைப் பெறும் என்று இரு நாடுகளும் தெரிவித்தன.
பாரிஸுக்கு அருகிலுள்ள ஒரு விமான தளத்தில் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இந்த நடவடிக்கையை “வரலாற்று சிறப்புமிக்கது” என்று பாராட்டினார்.
உக்ரேனுக்கான ரஃபேல் F4 போர் விமானங்களின் விநியோகம் 2035 ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஒப்பந்தத்தின் கீழ் உக்ரேன், வான் பாதுகாப்பு அமைப்புகள், வெடிமருந்துகள் மற்றும் ட்ரோன்களையும் பெறும்.

ஒப்பந்த நிதி விவரங்கள் இன்னும் வரையப்படவில்லை, ஆனால் ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியை ஈர்க்கவும், முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களை அணுகவும் பிரான்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது 27 உறுப்பினர்களைக் கொண்ட ஒன்றியத்தை பிளவுபடுத்திய சர்ச்சைக்குரிய நடவடிக்கையாகும்.
இதனிடையே, ரஷ்யா அண்மைய மாதங்களில் உக்ரேனுக்கு எதிரான தனது ட்ரோன், ஏவுகணைத் தாக்குதல்களை அதிகரித்துள்ளது.
இது எரிசக்தி மற்றும் ரயில் உள்கட்டமைப்பை குறிவைத்து நாடு முழுவதும் பெரும் மின்தடையை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



















