இலங்கை, பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகள் பங்கேற்கும் டி:20 முத்தரப்பு தொடரின் முதல் போட்டியானது இன்று (18) மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதும்.
நவம்பர் 29 ஆம் திகதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தமாக 07 போட்டிகள் இடம்பெறும்.
அனைத்து போட்டிகளும் ஒரே இடத்தில் – ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரைத் தொடர்ந்து பாகிஸ்தானும் இலங்கையும் இந்த முத்தரப்புத் தொடருக்கு வருகின்றன.
ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் வென்றது.
இதற்கிடையில், இலங்கை அணித் தலைவர் சரித் அசலங்க மற்றும் வேகப்பந்து வீச்சாளர் அசித பெர்னாண்டோ ஆகியோரின் சேவைகளையும் இலங்கை இழந்துள்ளது.
அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக வீடு திரும்புகின்றனர்.
அசலங்க அணியில் இடம்பெறாதமையினால் முத்தரப்பு தொடரின் போது சகலதுறை வீரர் தசூன் ஷானக்க இலங்கையை வழிநடத்துவார்.
அசலங்கவுக்கு மாற்றாக பவன் ரத்நாயக்க டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணி, தொடரிலிருந்து விலகிய பின்னர், முத்தரப்பு தொடரில் மூன்றாவது அணியாக சிம்பாப்வே சேர்க்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாக்டிகா மாகாணத்தின் உர்கான் மாவட்டத்தில் நடந்த விமானத் தாக்குதலில் மூன்று உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்ததை அடுத்து, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB) முத்தரப்புத் தொடரில் இருந்து விலகியது.
இதற்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியது.
இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த விலகல் வந்தது.
துரதிர்ஷ்டவசமாக, பாகிஸ்தான்-இலங்கை-சிம்பாப்வே டி20 முத்தரப்பு தொடருக்கான ஒளிபரப்பு அல்லது நேரடி ஒளிபரப்பு உரிமையை எந்த இந்திய தொலைக்காட்சி அலைவரிசையும் பெறவில்லை.
இது அண்மைய காலமாக, குறிப்பாக பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை குறிக்கிறது.















