பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் முத்தரப்பு டி20 சர்வதேச தொடரில் தொடர்ச்சியாக இரு தோல்விகளை சந்தித்துள்ள இலங்கை அணி இன்றைய தினம் கட்டாய வெற்றியை நோக்கியவண்ணம் சிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது.
ராவல்பிண்டியில் நடைபெற்றுவரும் குறித்த முத்தரப்பு டி20 தொடரில் இலங்கை அணி முன்னதாக சிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் அடுத்தடுத்து இரு தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ள நிலையில் அடுத்த இடத்துக்கான அணியை தீர்மானிக்கும் தீர்க்கமான ஆட்டமாக இன்றைய ஆட்டம் அமையவுள்ளது.
முன்னதாக இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கிடையில் நடைபெற்ற ஆட்டத்தில் சிம்பாப்வே அணி 67 ஓட்டங்களினால் அபார வெற்றியீட்டியிருந்தது.
இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வியை தழுவினால் சிம்பாப்வே அணி நேரடி இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை எட்டிவிடும். காரணம் இலங்கை அணி பின்னர் எஞ்சிய பாகிஸ்தான் அணியுடனான போட்டியை வென்றாலும் 2 புள்ளிகள் மாத்திரமே கிடைக்கும்.
மாறாக இலங்கை அணி வெற்றிபெற்றாலும் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு நேரடியாக கிடைக்காது. ஏனென்றால் இலங்கையின் நெட்ரன்ரேட் பெறுமானம் மிகவும் மந்தமான நிலையில் (-2.679) காணப்படுகிறது. இன்றைய வெற்றியுடன், அடுத்து பாகிஸ்தானையும் வீழ்த்தினாலே இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற முடியும்.



















