இலங்கை முழுவதும் நூற்றுக்கணக்கான உயிர்களை காவு கொண்ட, ஆயிரக்கணக்கான மக்களை இடம்பெயர்வுக்கு வழிவகுத்த பேரழிவு வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் மனமார்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிரதமர் ஒரு தொலைபேசி அழைப்பின் போது, பரவலான பேரழிவு குறித்து ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியதுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனுதாபங்களை தெரிவித்தார்.
மிகவும் சவாலான சூழ்நிலையில் இலங்கை அதிகாரிகள், இராணுவம் மற்றும் அவசரகாலக் குழுக்கள் மேற்கொண்ட விரைவான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளையும் அவர் பாராட்டினார்.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை பேரழிவுகளில் பாகிஸ்தானின் சொந்த அனுபவத்தை நினைவு கூர்ந்த பிரதமர், இலங்கை மக்களுக்கு இது ஒரு விதிவிலக்கான கடினமான தருணம் என்று அவர் விவரித்தர்.
அத்துடன், கொழும்புடன் இஸ்லாமாபாத்தின் முழுமையான ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
சூறாவளியின் பின்விளைவுகளைச் சமாளிக்கவும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும் இலங்கைக்கு உதவும் வகையில், அவசரமாகத் தேவைப்படும் மனிதாபிமான உதவிகளை பாகிஸ்தான் உடனடியாக அனுப்பி வருவதாக ஷெபாஸ், ஜனாதிபதி அநுரவிடம் தெரிவித்தார்.
அதேநேரம், பாகிஸ்தானின் ஒற்றுமையை வெளிப்படுத்தியதற்கும், சரியான நேரத்தில் மனிதாபிமான உதவிகளை வழங்கியதற்கும் இலங்கை ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
பேரழிவுக்குப் பிறகு முதலில் செயல்பட்ட நாடுகளில் பாகிஸ்தான் ஒன்றாகும் என்றும் குறிப்பிட்டார்.
இரு தலைவர்களும் தங்கள் முந்தைய தொடர்புகளை நினைவு கூர்ந்தனர் மற்றும் அரசியல், பொருளாதாரம் மற்றும் மேம்பாட்டுத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.
இதேவேளை, பாகிஸ்தான் இலங்கைக்கு 200 தொன் மனிதாபிமான உதவிகளை கடல் வழியாக அனுப்பியுள்ளது.
“டித்வா சூறாவளியைத் தொடர்ந்து நிவாரணப் பணிகளை ஆதரிப்பதற்காக, பாகிஸ்தான் இலங்கைக்கு 200 தொன் மனிதாபிமான உதவிகளை கடல் சரக்கு வழியாக அனுப்பியுள்ளது” என்று பாகிஸ்தான் வெளிவிகார அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.












