இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று மாலை (17) கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின்போது இரு தரப்பினரும் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடினர். குறிப்பாக, அண்மையில் இலங்கையை தாக்கிய டித்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அதனைத் தொடர்ந்து இந்தியா இலங்கைக்கு வழங்கிய மனிதாபிமான உதவிகள் குறித்து பேசப்பட்டது.
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்திய அரசு வழங்கிய உடனடி உதவிகளுக்காக ஜீவன் தொண்டமான், இந்திய அரசுக்கும் உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் தனது நன்றியை தெரிவித்தார். மேலும், பேரிடரால் பெருந்தோட்டப் பகுதிகள் உட்பட மலையகப் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமைகள் குறித்து அவர் இந்திய தூதுவருக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
இதற்கு பதிலளித்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கை மீண்டெழுவதற்காக இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என ஜீவன் தொண்டமானிடம் உறுதியளித்தார்.
















