2025 ஜனவரி முதல் செப்டம்பர் வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு வாகனம் திருடப்படுவதாக புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
திருடர்களால் அதிகம் குறிவைக்கப்படும் வாகனங்களில் கார்கள் பிரதானமாக உள்ளதாகவும் குறித்த ஆராய்ச்சியில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 80,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் திருடப்பட்டதாக கோ-ஆப் இன்சூரன்ஸ் மூலம் பெறப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 11 சதவீதம் அதிகமாகும் என்றும் காப்பீட்டு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் லண்டனின் பெருநகர பொலிஸ் பிரிவில் 24,211 வாகனத் திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதைத் தொடர்ந்து வெஸ்ட் மிட்லாண்ட்ஸில் 13,000 க்கும் மேற்பட்ட வாகன திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், ஜனவரி முதல் செப்டம்பர் வரை வேல்ஸில் 3,729 வாகனங்கள் திருடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது – இது 2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுடன் ஒப்பிடும்போது இந்த பிராந்தியத்தில் திருட்டுகளின் எண்ணிக்கையில் 70 சதவீதம் அதிகரிப்பைக் குறிக்கிறது.
















