படுகொலை முயற்சியில் கொல்லப்பட்ட ஷெரிப் ஒஸ்மான் ஹாடியின் மரணத்தைத் தொடர்ந்து பங்களாதேஷில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் துறைமுக நகரமான சிட்டகாங்கில் (Chittagong) உள்ள இந்திய துணை உயர் ஸ்தானிகராலயமும், அதன் அருகிலுள்ள இந்திய அதிகாரிகளின் குடியிருப்புகளும் ஆர்ப்பாட்டக்கார்களால் சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.
ஆர்ப்பாட்டக்கார்கள், துணை தூதரகம் மற்றும் அதிகாரிகளின் குடியிருப்புகள் மீது கற்களை வீசியும், தீ வைத்தும் இந்த வன்முறைச் சம்பவத்தை அரங்கேற்றியதாக சட்ட அமலாக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
கடந்த ஆண்டு ஜூலை எழுச்சியின் முக்கிய நபரும், கடந்த வாரம் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்குள்ளான இன்கிலாப் மஞ்சின் செய்தித் தொடர்பாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்தப் போராட்டங்கள் வெடித்தன.
அடையாளம் தெரியாத தாக்குதல்காரர்களின் தலையில் சுடப்பட்டதில் படுகாயமடைந்த ஹாடி, சிங்கப்பூரில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு (18) இரவு காலமானார்.
அவரது மரணத்துடன் தொடர்புடைய நபர்களைக் கைது செய்யக் கோரி ஆயிரக்கணக்கான பங்களாதேஷ் மக்கள் வீதிகளில் இறங்கினர்.
கோபமடைந்த போராட்டக்காரர்கள் தலைநகரில் உள்ள பல கட்டிடங்களுக்கு தீ வைத்தனர், அவற்றில் இரண்டு முன்னணி செய்தித்தாள்களின் அலுவலகங்களும் அடங்கும்.















