இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பிலுள்ள ‘இந்திய இல்லத்தில்’ நடைபெற்றது.
இதன்போது, இலங்கையில் ‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, இந்திய அரசாங்கம் முன்னெடுத்த ‘சாகர் பந்து’ (Sagar Bandhu) திட்டத்திற்காகச் சஜித் பிரேமதாச தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
மேலும், 100 மில்லியன் டொலர் நன்கொடை மற்றும் 350 மில்லியன் டொலர் சலுகைக் கடன் என மொத்தம் 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியமைக்காக, இந்நாட்டின் 220 இலட்சம் மக்கள் சார்பாகவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய வெளியுறவு அமைச்சருக்கும், இந்திய அரசாங்கம் உட்பட முழு இந்திய மக்களுக்கும் அவர் தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
2004 ஆம் ஆண்டு சுனாமியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு சரியான அனர்த்த முகாமைத்துவ திட்டத்தை உருவாக்கத் தவறியதாலேயே, இந்தச் சூறாவளியில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
அத்துடன், நாட்டிற்கு முறையான அனர்த்த முகாமைத்துவ திட்டமும் துறைசார் அமைச்சொன்றை ஸ்தாபிப்பது அவசியம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, 1999 ஆம் ஆண்டு ஒடிசாவில் ஏற்பட்ட சூப்பர் சைக்ளோன் சூறாவளிப் பாதிப்பினால், 10,000 பேர் உயிரிழந்து 180 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டமையைத் தொடர்ந்து இந்தியா தனது அனர்த்த முகாமை முறையை மாற்றியமைத்ததன் மூலம், 2013 ஆம் ஆண்டு சூறாவளியிலிருந்து 10 இலட்சம் மில்லியன் மக்களையும், 2019 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சூறாவளியிலிருந்து கிட்டத்தட்ட 12 இலட்சம் உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் இங்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டினார். அவ்வாறே அந்த மாதிரியை இலங்கையும் பின்பற்றுவது சிறந்தது எனவும் அவர் பரிந்துரைத்தார்.
இதனிடையே, இந்திய அரசு வழங்கும் உதவிகள் மிகவும் வெளிப்படையான முறையில் மக்களைச் சென்றடைய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இதற்கு எதிர்க்கட்சி என்ற ரீதியில் பெற்றுத் தர முடியுமான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என சஜித் பிரேமதாச உறுதியளித்ததோடு, இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குமாறும் இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.














