கடுமையான வெப்பம் மற்றும் பரந்த பாலைவன நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்ற நாடான சவுதி அரேபியா அசாதாரண குளிர்கால அத்தியாயத்தை அனுபவித்து வருகின்றது.
பனிப்பொழிவு, கனமழை மற்றும் கடுமையாக வீழ்ச்சியடைந்த வெப்பநிலை நாட்டின் பெரும்பகுதிகளை தற்சமயம் ஆக்கிரமித்து உள்ளது.
இது குடியிருப்பாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது வேளையில் பாதுகாப்பு ஆலோசனைகளைத் தூண்டுவதற்கும் வழிவகுத்தது.
இந்த அசாதாரண நிகழ்வு, காலநிலை மாற்றத்தைக் கையாளத் தயாராக இல்லாத பகுதிகளில் அசாதாரண வானிலையை எவ்வாறு ஏற்படுத்துகிறது என்பதை மீண்டும் ஒருமுறை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

பனிப்பொழிவானது சவுதி அரேபியாவின் தபூக் மாகாணத்தில் உள்ள மலைத்தொடர்களின் தோற்றத்தை வியத்தகு முறையில் மாற்றியுள்ளது.
குறிப்பாக ஜெபல் அல்-லாஸில் உள்ள ட்ரோஜெனா உட்பட, சுமார் 2,600 மீட்டர் உயரம் கொண்ட மலைப்பகுதிகள் பனியால் மூடப்பட்டிருந்தன.
ஹெயில் நகரைச் சுற்றியுள்ள பகுதிகள் உட்பட ஹெயில் பிராந்தியத்தின் சில பகுதிகளிலும் பனிப்பொழிவு ஏற்பட்டது – இது மத்திய கிழக்கு நாட்டில் அரிதான நிகழ்வு.
அதிகாலை நேரங்களில் சில இடங்களில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸுக்குக் கீழே குறைந்தது, இதனால் உயர்ந்த நிலங்களில் பனி குவிவதற்கு சாதகமான சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டன.
குளிர் காற்றுடன் பல பகுதிகளில் பரவலான மழைப் பொழிவு பதிவானது.
பிர் பின் ஹெர்மாஸ், அல்-அய்னா, அம்மார், அல்உலா கவர்னரேட், ஷக்ரா மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதே நேரத்தில் ரியாத், காசிம் மற்றும் கிழக்குப் பகுதியின் சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்தது.
தேசிய வானிலை ஆய்வு நிலையத்தின் தகவலின்படி, ரியாத்தின் வடக்கே உள்ள அல்-மஜ்மா மற்றும் அல்-காட் ஆகிய இடங்களிலும் பனிப்பொழிவு காணப்பட்டது – அங்கு திறந்தவெளி பகுதிகளிலும் உயரமான நிலப்பரப்பிலும் பனி படிந்துள்ளது.
இதேவேளை குடியிருப்பாளர்கள் அவதானமாக வாகனம் செலுத்துமாறும் வெள்ளம் ஏற்படக்கூடிய தாழ்வான பகுதிளில் வசிப்பதை மற்றும் செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது சவுதி அரேபியாவின் காலநிலை வரலாற்றில் ஒரு அரிய மற்றும் மறக்க முடியாத தருணத்தைக் குறிக்கிறது.
இதேவேளை, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) எதிர்பாராத குளிர்கால மழை, தெற்காசியாவில் வரலாறு காணாத வெப்ப அலைகள், பொதுவாக வறண்ட மத்திய கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் ஐரோப்பா மற்றும் வட ஆபிரிக்காவின் சில பகுதிகளில் ஏற்பட்ட அசாதாரண பனிப்பொழிவு நிகழ்வுகள், காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் வானிலை எவ்வாறு அடையாளம் காண முடியாததாக மாறி வருகிறது என்பதைக் காட்டுகின்றன.

















