தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு கடற்கரையில் கிறிஸ்துமஸ் தின நீச்சலுக்காகச் சென்ற ஒரு குழுவினர் கடுமையான கடல் அலைகளினால் பாதிக்கப்பட்டனர்.
இதன் விளைவாக இரண்டு பேர் கடல் அலையில் அல்லுண்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் வியாழக்கிழமை (25) தெரிவித்துள்ளனர்.
கடுமையான நீர் நிலைமைகளால் பாதிக்கப்பட்ட ஒரு குழு தொடர்பான மீட்பு நடவடிக்கைகளுக்காக உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை காலை 10:25 மணிக்கு பட்லீ சால்டர்டன் கடற்கரைக்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டதாக டெவன் மற்றும் கார்ன்வால் பொலிஸார் தெரிவித்தனர்.
கடலில் அல்லுண்ட பலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் துணை மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டனர்.
பின்னர் அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும், கடலில் அல்லுண்டு காணாமல் போன 40 மற்றும் 60 வயதுடைய இரண்டு ஆண்கள் இன்னமும் மீட்கப்படவில்லை என்பதையும் பொலிஸார் உறுதிபடுத்தினர்.
உயிர் காக்கும் பிரிவினருடன் இணைந்து காவல்துறையினர் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான விரிவான பணிகளை மேற்கொண்டனர்.
எனினும் பின்னர் மாலை வேளைியல் இருள் சூழ்ந்ததால் அந்த முயற்சிகள் கைவிடப்பட்டன.
அவர்களின் குடும்பத்தினருக்கு இது குறித்த முழுமையான விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினார்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்தின் தென்மேற்கு மற்றும் வேல்ஸின் சில பகுதிகளில் காற்றுக்கான மஞ்சள் வானிலை எச்சரிக்கை அமுலில் இருந்தது.
எனினும் டிசம்பர் 26 ஆம் திகதிக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
இருந்தாலும், நீராடுவதற்காக கடலுக்கு செல்ல வேண்டாம் என்று பொலிஸார் மக்களை வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


















