வாழ்நாள் சாதனையாளருக்கான அவுஸ்ரேலிய கிரிக்கெட் ஹொல் ஆப் பேம் (HALL OF FAME) பட்டியலிலில் இணைந்தார் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ , இவருக்கான விருது மற்றும் அங்கீகாரத்தை அவுஸ்ரேலிய கிரிக்கெட் வழங்கி வைத்தது.
அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ, . இரு முறை மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் பந்து வீசினார்.
2003ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை தொடரில் 22 விக்கெட் வீழ்த்தி, அவுஸ்ரேலியா சம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்தார்.
டி-20 அரங்கில் ஹெட்ரிக் சாதனை படைத்த முதல் பந்துவீச்சாளர்.
1999ம் ஆண்டு முதல் 2012 வரை 13 ஆண்டுகள் கிரிக்கெட் அரங்கில் ஆதிக்கம் செலுத்திய இவர், 322 சர்வதேச போட்டிகளில் 718 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
ஓய்வுக்கு பின் வர்ணனையாளராக செயற்பட்டு வருகிறார். இவரது சேவையை அங்கீகரிக்கும் விதமாக, வாழ்நாள் சாதனையாளருக்கான அவுஸ்ரேலிய கிரிக்கெட் ஹொல் ஆப் பேம் பட்டியலில் இவரை உத்தியோகபூர்வமாக அறிவித்து இணைத்துக்கொண்டது.
பிரட்மேன், பொண்டிங், வோர்ன் உள்ளிட்ட ஜாம்பவான்கள் வரிசையில் இந்த கௌரவம் பெறும் 62வது அவுஸ்திரேலிய வீரரானார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரட் லீ – 2003ல் அவுஸ்ரேலியா உலக கோப்பை வென்றது, தொடர்ந்து 16 டெஸ்ட் வெற்றிகள் பெற்றது போன்றவை முக்கியமான நிகழ்வுகள். தனிப்பட்ட முறையில் பார்த்தால், எனக்கு விக்கெட் வீழ்த்துவது முக்கியமல்ல. 9 வயதிலேயே மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் பந்துவீச வேண்டும் என்பதை இலக்காக கொண்டிருந்தேன். வேகமாக ஓடுவதற்கு ஏற்ப எனது உடல் அமைப்பும் இருந்தது. கடந்த 2003ல் தென் ஆப்ரிக்காவில் நடந்த உலக கோப்பை அரையிறுதியில் முதல் முறையாக மணிக்கு 160.1 கி.மீ., வேகத்தில் பந்துவீசி, இலங்கையின் மார்வன் அத்தபத்துவவை போல்டாக்கினேன். அந்த போட்டியில் நாங்கள் 212 ரன் எடுத்திருந்ததால், நெருக்கடியாக உணர்ந்தோம். நான் சிறப்பாக பந்துவீச வேண்டுமென சக வீரர்கள் எதிர்பார்த்தனர். நல்ல வேகத்தில் சரியான அளவில் பந்துவீசினேன். அப்போது ‘ஸ்கோர் போர்டில்’ எனது ‘வேகம்’ 160.1 என காண்பிக்கப்பட்டது. அது ‘ஸ்பெஷல்’ தருணம். பின் 2005, மார்ச் 5ல் நேப்பியரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் மணிக்கு 160.8 கி.மீ. வேகத்தில் பந்துவீசினேன். உலகில் இருவிதமான மனிதர்கள் உண்டு. ஒருவர் நெருக்கடியை சமாளிக்க முடியாமல், ஓடி ஒளிந்து கொள்வர். இன்னொருவர் கடைசி வரை போராடுவர். நான் இரண்டாவது ரகம். வெற்றி, தோல்வி, ‘டிரா’ பற்றி கவலைப்பட மாட்டேன். கடைசி தருணம் வரை களத்தில் போராடுவேன், என்றார்.

















