சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட, சம்மாந்துறை – 2 பொது சுகாதார பரிசோதகர் பிரதேசத்தில் வாராந்த வர்த்தக நிலைய சுகாதார பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இவ்விசேட நடவடிக்கையின் போது, 03 உணவகங்கள் மற்றும் 05 பலசரக்குக் கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. பரிசோதனைகளின் போது, பொதுச் சுகாதார நடைமுறைகளை முறையாகப் பேணாத 03 வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் B-அறிக்கை (B Report) தாக்கல் செய்யப்பட்டது. இதனடிப்படையில், ஒரு தேநீர்க்கடைக்கு நீதிமன்றத்தினால் தற்காலிக மூடல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த நீதிமன்ற உத்தரவு, நேற்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டது. பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, இவ்வாறான விசேட சுகாதார சுற்றிவளைப்புகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். அதேவேளை, வர்த்தக நிலைய உரிமையாளர்கள் சுகாதார விதிமுறைகளை கட்டாயமாகவும் முறையாகவும் பேணுவதன் மூலம் பொதுச் சுகாதாரத்தை பாதுகாக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.















