தற்போதைய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட உள்ள பிரஜா சக்திக்கு எதிரான பிரேரணையானது இன்றையதினம் மானிப்பாய் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டது.
குறித்த பிரேரணையை இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் ரமணன் சபையில் முன்வைத்து கருத்துரைக்கையில்,
இந்தப் பிரஜா சக்தி என்பது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் விரோதமானதாகும். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஒவ்வொரு பிரதேசத்திலும் அபிவிருத்திகளை செய்து வருகின்ற போதிலும் அரசியல் நோக்கத்திற்காக இந்த குழுவானது கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியிலும் சமூக அமைப்புகளின் மத்தியிலும் குழப்பகரமான நிலை ஏற்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைகளானது சுயாதீனமாக இயங்குகின்ற கட்டமைப்பை கொண்டுள்ள நிலையில், எச்சந்தர்ப்பத்திலும் இந்த குழுவானது இயங்க முடியாது.
கிராமங்கள் தோறும் அமைக்கப்பட்டு வரும் பிரஜா சக்தியை என்ற அமைப்பானது எமது சபையின் விதி மற்றும் நிர்வாக கட்டமைப்புகளிலும் எந்தவொரு சிபாரிசுகளையும் கோர முடியாது என இந்த சபையில் பிரேரணையை முன்வைக்கின்றேன் என்றார்.
இதன்போது குறித்த பிரேரணை மீது உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். இதன்போது கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதுடன் பிரேரணையானது வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன்போது தேசிய மக்கள் சக்தியின் ஐந்து உறுப்பினர்கள் பிரரணைக்கு எதிராகவும், சபையில் இருந்த ஏனைய அனைத்து உறுப்பினர்களும் பிரேரணைக்கு ஆதரவாகவும் வாக்களித்த நிலையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.












