ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், ‘தி ஃபிலிம் ஸ்கூல்’ எனும் பயிற்சி பட்டறையை நடத்தி வருகிறார். இதில் பயின்ற 34 மாணவர்கள் ஒன்றிணைந்து 34 சுயாதீன திரைப்படங்களை உருவாக்குகிறார்கள். இதற்கான அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. ஒரே நிறுவனத்தில் பயின்ற 34 பேரின் 34 திரைப்படங்கள் ஒரே நேரத்தில் தொடங்கப்படுவது இதுதான் முதன்முறை.
இந்நிகழ்வில் படத்தொகுப்பாளர்கள் பி.லெனின், ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவாளர்கள் பி.சி.ஸ்ரீராம், ரவி வர்மன், வரைகலை இயக்குநர் ட்ராட்ஸ்கி மருது, தயாரிப்பாளர்- விமர்சகர் தனஞ்ஜெயன், இயக்குநர்கள் ஞானராஜசேகரன், ஹரிஹரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில், எடிட்டர் பி.லெனின் பேசும்போது, “ஏழு ஸ்வரம் தெரிந்து இருந்தால் உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று பேசி விடலாம். அதற்கு ஆங்கிலம் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. இந்தி தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. தமிழ் தெரிந்தால் மட்டும் கூட போதும். இங்கு விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட ‘தி ஃபிலிம் ஸ்கூல்’ மாணவப் படைப்பாளிகளின் சுய விவர பட்டியலில் படைப்புக்கான பட்ஜெட் ரூ.50 லட்சம் தான் அதிகபட்சமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதில் படப்பிடிப்பு நாட்களும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இப்போது நாங்கள் அதைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். அதனை பார்க்கும் போது நாட்கள் தெரியவில்லை. முழு நீள திரைப்படத்தையும் சொன்ன நாட்களுக்குள் படப்பிடிப்பை நிறைவு செய்து வழங்கி இருக்கிறார்கள். நான் திரைத்துறையில் பணியாற்றத் தொடங்கி இது 61-வது ஆண்டு. இன்றும் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். ஸ்கிரிப்ட் தான் முக்கியமானது. திரைக்கதையும் முக்கியம். எனவே இளம் இயக்குநர்கள் அதில் கவனம் செலுத்துங்கள்” என்றார்.
















