கடந்த எட்டு ஆண்டுகளில் பிரித்தானிய பிரதமர் ஒருவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக, பிரதமர் கீர் ஸ்டார்மர் இன்று பீஜிங் செல்கிறார்.
தனது இந்தப் பயணம் குறித்து புளூம்பெர்க் (Bloomberg) ஊடகத்திற்கு கருத்து தெரிவித்துள்ள அவர், அமெரிக்கா அல்லது சீனா ஆகிய இரு நாடுகளில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் தமக்கு இல்லை எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவைப் புறக்கணிப்பது புத்திசாலித்தனமான செயல் அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரித்தானியாவின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் பலரும் இந்தப் பயணத்தில் பிரதமருடன் இணைந்துள்ளனர்.
லண்டனில் சர்ச்சைக்குரிய சீன ‘மெகா’ தூதரகத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட சில நாட்களிலேயே இந்த விஜயம் அமைகிறது.
எனினும், Hong Kong ஜனநாயகப் போராட்டவாதி ஜிம்மி லாய் (Jimmy Lai) விடுதலை மற்றும் மனித உரிமை விவகாரங்கள் குறித்து சீனத் தலைவர்களுடன் ஆலோசிக்க வேண்டும் என அவருக்கு கடும் அழுத்தங்கள் எழுந்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்போவதாக அச்சுறுத்தி வரும் நிலையில், பிரித்தானிய பிரதமரின் இந்தச் சீனப் பயணம் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.














