தனது ‘திருமணம்’ படத்துக்கு தமிழக அரசு விருது நிராகரிக்கப்பட்டு இருப்பது தொடர்பாக சேரன் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
2016-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான திரையுலகிற்கான தமிழக அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக பலரும் நன்றி தெரிவித்து வரும் அதே சமயத்தில், விருது கிடைக்காத பலரும் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
தற்போது 2019-ம் ஆண்டு தனது இயக்கத்தில் வெளியான ‘திருமணம்’ படத்துக்கு விருது கிடைக்காதது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் சேரன்.
இது தொடர்பாக சேரன் தனது எக்ஸ் தளத்தில், “பெண்களுக்கு இலவச பஸ்.. வறுமையில் இருக்கும் குடும்பங்களுக்கு உதவித்தொகை.. திருமணத்திற்கு அரசு உதவி.. இதையெல்லாம் செய்யும் அரசு. பெரும் பணம் இல்லாத குடும்பங்களில் கடன் படாமல் சிக்கனமாக எப்படி திருமணம் நடத்தப்பட வேண்டும்.
வாழ்க்கைக்கான சேமிப்பாக எப்படி அதை மாற்றலாம் என கருத்தோடு விளிம்புநிலை மக்களுக்கான படமாக உருவாக்கப்பட்டிருந்த ‘திருமணம்’ திரைப்படம் தேர்வுக் குழுவினரால் கண்டுகொள்ளப்படாமல் போனது அவர்களின் நுண்ணிய பார்வை அற்ற தன்மையை அல்லது தங்களை சார்ந்துள்ளவர்களுக்கு மட்டுமே விருது கொடுக்கும் தன்மையை காட்டுகிறது..
அரசுக்கு வரி கட்டி வாக்களித்து நாங்களும் இந்த சமூகத்தின் வாக்காளர்கள் என்ற உரிமையில் எனக்கு கேட்கும் உரிமை இருக்கிறது. இனி எவருக்கும் இதுபோல் நடக்க கூடாது.. நேர்மையான முறையில் பாரபட்சமின்றி யாரும் ஒதுக்கப்படாமல் விருதுகள் சென்றைடைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.. அரசுகள் மாறலாம்.. அரசின் நிலைப்பாடு என்றும் பாராபட்சமாக இருக்க கூடாது என்பதை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
















