நாட்டில் மனித உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலான கடும் வெப்பமான வானிலை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் மெரில் மென்டிஸ், சர்வதேச ரீதியில் கடந்த சில ஆண்டுகளில் சராசரி வெப்பநிலை வழமையை விட 1 முதல் 1.5 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரித்துள்ளது.
இதுவே தற்போதைய கடும் வெப்ப நிலைக்கு முக்கிய காரணமாகும். பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள ‘எல் நினோ’ காலநிலை மாற்றத்தினால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மேலும் அதிகரித்து வருகின்றது.
இதன் விளைவாக, எதிர்வரும் வாரங்களில் நாட்டின் வெப்பநிலை வழமையை விடவும் மிக அதிகமாகக் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் வரட்சியான காலநிலையும் ஏப்ரல் மாதம் முழுவதும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சப்ரகமுவ, வடமேல், மேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்கள் வெப்பநிலை அதிகரிப்பினால் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என அடையாளங்காணப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடும் வெப்பத்தினால் ஏற்படக்கூடிய உடல்நல பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்
இதேவேளை பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
தற்போதைய வறண்ட வானிலையை முன்னிட்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் தலைவர் சந்தன பண்டார ஊடகங்களிடம் இந்த விடயத்தை கூறியுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
எதிர்காலத்திலும் வறண்ட வானிலை தொடர்ந்து மோசமடைந்தால், தண்ணீர் விநியோகத்தில் சில சிரமங்கள் ஏற்படக்கூடும் என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் நீருக்கு நெருக்கடி நிலை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதிலும் குறிப்பாக மலையகத்தில் நீருக்காக இயற்கை ஆதாரங்களை நம்பி வாழும் மக்கள் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.













