ரஷ்யா கடந்த இரண்டு நாட்களில் உக்ரேன் மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
தலைநகர் கீவ் (Kyiv)மற்றும் பிற நகரங்கள் மீது கடந்த இரு நாட்களில் நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்களைக் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரேனிய அதிகாரிகள் வியாழக்கிழமை (14) தெரிவித்தனர்.
புதன்கிழமை காலை முதல் ரஷ்யா 1,567 ஆளில்லா விமானங்களை ஏவியுள்ளதாக உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
கடந்த இரண்டு நாட்களில் உக்ரேன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 27 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக கீவ் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இலட்சக்கணக்கானோரைக் கொன்று, உக்ரேனின் பெரும் பகுதிகளை உருகுலைத்த போர் முடிவுக்கு வரவுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கடந்த சனிக்கிழமை வெளியிட்ட கருத்துக்கு மத்தியில் இந்த தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன.
வியாழக்கிழமை நடந்த தாக்குதல்கள் குறித்து மொஸ்கோவிடமிருந்து உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.















