பொதுமக்களின் சொத்துக்களை கொள்ளையடித்து ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்குவது இந்நாட்டு பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும் என்றும் தற்போதைய அரசாங்கம் அந்த பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் ஒரு அரசாங்கம் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். எந்தவொரு குற்றமும் காலப்போக்கில் மறைந்துபோக இடமளிக்கப் போவதில்லை எனவும் குற்றவாளிகளை முறையாக சட்டத்தின் முன் நிறுத்தும் பொறுப்பு நிறைவேற்றப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் இன்று (25) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் வழங்கிய ஆணையின் நோக்கம் ஒரு நாகரீகமான நாட்டை கட்டியெழுப்புவதாகும் என இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி எவர் மீதும் தனிப்பட்ட பழிவாங்கல்கள் இடம்பெறாது எனவும் ஜனாதிபதி முதல் அடிமட்ட அரசியல் தலைமை வரையிலும் ஜனாதிபதி செயலாளர் முதல் அடிமட்ட அரச அதிகாரி வரையிலும் உள்ள அனைவரும் இந்த நாகரீகமான நாட்டின் பங்காளிகளாக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
அதேபோல் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆயுதமேந்திய குழுக்களை ஒடுக்குவதற்காக அரசாங்கம் தற்போது பல வலுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் இன்று நாடு நீண்டகால நிலையான பயணத்தை நோக்கி கால்பதித்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.














