இங்கிலாந்தின் தென்கிழக்கு சர்ரே (Surrey) கவுண்டியில் அமைந்துள்ள வீடொன்றில் மூன்று வயது சிறுமியொருவர் சடலமாக கண்ணெடுக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, கொலைச் சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை மாலை 5.40 மணியளவில், சர்ரே கவுண்டியின் செர்ட்சி (Chertsey) பகுதியில் உள்ள பைர்க்ராஃப்ட் வீதியில் (Pyrcroft Road) அமைந்துள்ள ஒரு வீட்டில் பாதுகாப்பு தொடர்பான அச்சம் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
அங்கு மூன்று வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன், 31 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டார்.
கடுமையான காயங்களுடன் இருந்த அந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை முடிந்த பின்னர் பொலிஸ் காவலில் எடுக்கப்படுவார் என்றும் சர்ரே பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணையை முன்னெடுத்து வரும் முக்கிய குற்றப் புலனாய்வுப் பிரிவு , இந்த மரணத்தை குடும்பச் சூழ்நிலையின் பின்னணியில் இடம்பெற்ற துயரகரமான சம்பவமாகக் கருதுவதாக தெரிவித்துள்ளது.

















