அயோத்தி ராமர் கோயிலுக்குக் கிடைத்த நன்கொடைகளை முறைகேடாகக் கையாண்டதாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (FIR) பெயரிடப்பட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அயோத்தி காவல்துறையினர் இன்று (26) தெரிவித்தனர்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து வந்த சிறப்புப் புலனாய்வுக் குழு தனது முதற்கட்ட அறிக்கையை உத்தரப் பிரதேச அரசிடம் சமர்ப்பித்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் ‘ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் உறுப்பினரான கிருஷ்ண மோகன் அளித்த முறைப்பாட்டின் பேரில், கோட்வாலி (Kotwali) ராமஜென்மபூமி பொலிஸ் நிலையத்தில் இந்த முதல் தகவல் அறிக்கை நேற்றைய தினம் பதிவு செய்யப்பட்டது.
இந்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எட்டு நபர்கள்: அவினாஷ் சுக்லா, லவ்குஷ் மிஸ்ரா, அனுகல்ப் மிஸ்ரா, மனிஷ் குமார் யாதவ், கருணேஷ் பாண்டே, ராமசங்கர் மிஸ்ரா, ராம் சங்கர் யாதவ், தின்னு யாதவ் மற்றும் சுபாஷ் ஸ்ரீவாஸ்தவ் ஆகியோர் ஆவர்.
இந்த எட்டுப் பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணையின் ஒரு பகுதியாக அவர்களிடம் மேலதிக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

















