ஹுனுபிட்டிய கங்காராம விகாரையை மையமாகக் கொண்டு பேர வாவியைச் சுற்றியுள்ள பகுதியை சர்வதேச சுற்றுலா மற்றும் கலாச்சார மையமாக மேம்படுத்துவதற்காக செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள ‘Temple City’ திட்டம் குறித்த கலந்துரையாடலொன்று, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களின் நன்மதிப்பைப் பெற்ற ஹுனுபிட்டிய கங்காராம விகாரையானது கொழும்பு நகரின் முதன்மையான ஆன்மீக மற்றும் கலாச்சார மையமாக விளங்குவதுடன், அதன் சுற்றுலாத் திறனைக் கண்டறிந்து, சுற்றியுள்ள பகுதியை ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் நோக்கில், கங்காராம விகாரையின் வழிகாட்டுதலின் கீழ் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த ‘Temple City’ திட்டம் தொடங்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எளிதாகவும் சுதந்திரமாகவும் நடமாடும் வகையில், பேர வாவியைச் சுற்றி நடைபாதை அமைத்தல், சுற்றியுள்ள பகுதியை அழகுபடுத்தி சுற்றுலாப் பயணிகளுக்கு உகந்த வசதிகளை மேலும் மேம்படுத்துதல் உள்ளிட்ட பல அபிவிருத்திப் பணிகள் செயல்படுத்தப்படவுள்ளன.
தொடர்புடைய திட்டங்கள் மற்றும் அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் இத்திட்டத்தை விரைவாக முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதியின் செயலாளர் இங்கு வலியுறுத்தினார்.
இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதன் மூலம் பேர வாவி மற்றும் கங்காராம விகாரையை மையமாகக் கொண்ட பகுதியை சர்வதேச தரத்திலான சுற்றுலா மற்றும் கலாச்சார மையமாக மாற்றியமைக்க முடியும் எனவும் கொழும்பு நகரின் சுற்றுலா ஈர்ப்பை மேலும் அதிகரிக்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஹுனுபிட்டிய கங்காராம விகாராதிபதி கலாநிதி வண. கிரிந்தே அஸ்ஸஜி தேரர், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எம். ஜி. ஹேமச்சந்திர, கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் ஹேமந்த குமார, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் மற்றும் தொடர்புடைய அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.











