தென்மேற்கு ஜப்பானின் ஒரு பகுதியை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியதைத் தொடர்ந்து 13 பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும், காணாமல் போனவர்களை தேடும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ஜப்பானியப் பிரதமர் சனாயே தகாய்ச்சி புதன்கிழமை (29) காலை தெரிவித்தார்.
அத்துடன், அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனது இரங்கலையும், அவர்களது உறவினர்களுக்குத் தனது அனுதாபத்தையும் தெரிவித்ததோடு, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் வெப்பமான வானிலையில் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளுமாறும் வலியுறுத்தினார்.
செவ்வாய்க்கிழமை (28) பிற்பகுதியில், ஜப்பானின் தெற்குப் பகுதியின் முக்கியத் தீவான கியூஷுவில் உள்ள குமாமோட்டோ பகுதியில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஒரு தசாப்தத்திற்கு முன்பு கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அந்த மாகாணம் முழுவதும், சுமார் 2,60,000 பேரை வெளியேற்ற முகாம்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
சுமார் 7 லட்சம் மக்கள் வசிக்கும் மத்திய கியூஷுவின் மிகப்பெரிய நகரமான குமாமோட்டோ நகரத்திற்குத் தெற்கே சுமார் 20 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது.
மிகக் கடுமையான அதிர்வுகளை உணர்ந்த பகுதிகளில் வசிப்பவர்கள், அடுத்த ஒரு வாரத்திற்கு ஏற்படக்கூடிய வலுவான நிலநடுக்கங்கள் மற்றும் நிலச்சரிவு அபாயங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
36,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் இன்னும் மின்சாரம் இல்லாத நிலையில், புதன்கிழமையன்று வெப்பநிலை சுமார் 34 டிகிரி செல்சியஸ் (93 டிகிரி ஃபாரன்ஹீட்) வரை உயரும் என்பதால், வெப்பத் தாக்குதலால் (heat stroke) ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் கவலை கொண்டுள்ளனர்.
இப்பேரிடரின் முழுமையான பாதிப்பு விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.














