மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது திடீர் தாக்குதல் முயற்சியாக ஈரான் பல ஏவுகணைகளை ஏவியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் அப்பகுதியில் நிலவியிருந்த போர் அமைதி நிலை மீண்டும் குலைந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை அன்று EDT நேரம் 17:45-க்கு (GMT நேரம் 21:45-க்கு) இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எனினும் ஏவப்பட்ட அனைத்து ஏவுகணைகளும் வெற்றிகரமாக இடைமறித்து அழிக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (Centcom) தெரிவித்தது.
இருப்பினும், தாக்குதலுக்கான இலக்குகள் அமைந்திருந்த இடங்கள் எதையும் அது வெளியிடவில்லை.
இதற்கிடையில், ஈரான் இயக்கிய ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈராக்கில் உள்ள ஈரானுடன் இணைந்த பயங்கரவாதிகள் மீது அமெரிக்க இராணுவமும் சவுதி அரேபியப் படைகளும் தாக்குதல் நடத்தியதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது.
ஈரானின் நலன்களுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக, ஜோர்டானில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் மற்றும் அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை மையம் ஆகியவற்றின் மீது பல ஏவுகணைகளைத் தாங்கள் ஏவியதாக ஈரானின் புரட்சிகரப் படை பின்னர் தெரிவித்தது.
கடந்த வார இறுதியில் ஈரான் மீதான இரண்டு வார கால அமெரிக்கக் குண்டுவீச்சு நடவடிக்கையை திடீரென இரத்து செய்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தெஹ்ரானுடன் “சிறந்த பேச்சுவார்த்தைகள்” நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளார்.
அதேவேளையில், பேச்சுவார்த்தைகள் பலனளிக்காத பட்சத்தில் தாக்குதல்களை மீண்டும் தொடங்கப்போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
இருப்பினும், வொஷிங்டனுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க விரும்புவதாகக் கூறப்படுவதை ஈரான் மறுத்துள்ளது.
இந்த நிலையில், மோதல் தீவிரமடைந்தால் நீரிணை வழியாக எரிசக்தி விநியோகம் மேலும் பாதிக்கப்படலாம் என்ற கவலைகளின் காரணமாக புதன்கிழமை (29) அதிகாலையில் எண்ணெய் விலைகள் மீண்ம் உயர்ந்தன.
ஆசியாவில் காலை நேர வர்த்தகத்தில், உலகளாவிய அளவுகோலான பிரென்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 4.3% உயர்ந்து $87.70 (£65.98) ஆக இருந்தது.
அதே நேரத்தில் அமெரிக்காவில் வர்த்தகம் செய்யப்பட்ட எண்ணெய் 4.2% உயர்ந்து $82.62 ஆக இருந்தது.
இந்த அண்மைய தாக்குதல்கள், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வொஷிங்டன் பயணத்துடன் ஒருங்கே நிகழ்ந்தன.
அங்கு அவர் வெள்ளை மாளிகையில் ட்ரம்பைச் சந்தித்தார் மற்றும் ஈரான் மீதான கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாமின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார்.
அண்மைய பென்டகன் தரவுகளின்படி, பெப்ரவரியில் ஈரான் மீது தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவிட்டதிலிருந்து குறைந்தது 624 அமெரிக்க இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.














