உலகக் கிண்ணத்தில் தனியார் முதலீட்டைக் கோரும் ஃபிஃபாவின் (FIFA) திட்டங்கள் தொடர்பாக, கால்பந்தின் நிர்வாக அமைப்புகளுக்கு இடையே ஒரு பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
இதற்கு UEFA (ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம்) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் சாத்தியமான புறக்கணிப்பு குறித்து விவாதிக்கத் தயாராகி வருகின்றன.
ஒளிபரப்பு, விளம்பர ஆதரவு, நுழைவுச்சீட்டு விற்பனை மற்றும் உரிமம் வழங்குதல் உள்ளிட்ட ஃபிஃபாவின் வணிக உரிமைகளின் விற்பனையையும், அதன் போட்டிகளை நடத்துவது தொடர்பான செயல்பாட்டுப் பணிகளையும் ஒருங்கிணைக்கும் ‘ஃபிஃபா ஃபார்வர்ட் என்டர்பிரைஸ்’ (FFE) எனும் அமைப்பைத் தொடங்கவிருப்பதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் செவ்வாய்க்கிழமை (28) அறிவித்தது.
இந்த முன்மொழிவின் கீழ், சுமார் 20 பில்லியன் டொலர் (15 பில்லியன் பவுண்ட்) மதிப்புடையதாகக் கருதப்படும் FFE-யில், நிர்வாகக் கட்டுப்பாடற்ற சிறுபான்மைப் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ஃபிஃபா வெளி முதலீட்டாளர்களிடமிருந்து 4.2 பில்லியன் டொலர் (3.1 பில்லியன் பவுண்ட்) வரை திரட்டவுள்ளது.
உறுப்பினர் சங்கங்களின் ஒப்புதல் தேவைப்படும் தனது திட்டங்கள், அடுத்த நான்கு ஆண்டுகளில் 10 பில்லியன் டொலருக்கும் அதிகமான “கால்பந்து மேம்பாட்டு நிதியை” வழங்கக்கூடும் என்று நிர்வாக அமைப்பு கூறுகிறது.
ஆனால், ஐரோப்பிய கால்பந்து நிர்வாக அமைப்பான UEFA, இந்த முன்மொழிவுகள் கால்பந்து நிர்வாக அமைப்பின் எல்லையை மீறும் செயல் கூறி கடும் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
வெளி முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை விற்பதன் மூலம் 20 பில்லியன் டொலர் நிதியைத் திரட்டும் ஃபிஃபாவின் திட்டத்தை எதிர்ப்பது குறித்தும், அதில் உலகக் கிண்ணத்தை புறக்கணிப்பது போன்ற நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க, தனது 55 உறுப்புச் சங்கங்களின் அவசரக் கூட்டத்தை இந்த வாரமே நடத்துவதற்கான முயற்சிகளை UEFA தீவிரப்படுத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த முன்மொழிவு, சம்பந்தப்பட்ட தேசிய சங்கங்களின் பெரும்பான்மையான ஆதரவு மற்றும் ஃபிஃபாவின் 37 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சிலின் ஒப்புதலுக்கு உட்பட்டது.
ஃபிஃபா என்பது தற்போது சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்ட, உலகம் முழுவதிலும் உள்ள 211 தேசிய உறுப்புச் சங்கங்களை உள்ளடக்கிய ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
















