அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளிகளுக்கு விரைவாக மருத்துவ உதவிகளை வழங்கும் நோக்கில், மோட்டார் சைக்கிள் அடிப்படையிலான அவசர மருத்துவச் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களை ‘1990 சுவ செரிய’ (Suwa Seriya) அறக்கட்டளை அறிவித்துள்ளது.
போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலைத் தடைகள் காரணமாக அம்பியூலன்ஸ் சேவைகள் பெரும்பாலும் தாமதமாகும் பகுதிகளில், அவசர மருத்துவச் சிகிச்சையை விரைவாகவும் திறம்படவும் பெறுவதை உறுதிசெய்யும் வகையில் இந்த புதிய சேவை வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்த அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிள் அவசரச் சேவைப் பிரிவுகள் முக்கியமாக அதிக மக்கள் தொகை கொண்ட நகர்ப்புறங்களில் செயல்படும்.
இதில், கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அம்பியூலன்ஸ்கள் நோயாளிகளை விரைவாகச் சென்றடைவது கடினமாக உள்ள இடங்களும் அடங்கும்.
அம்பியூலன்ஸ் வருவதற்கு முன்பாகவே நோயாளிகளுக்கு உடனடி முதலுதவி மற்றும் அடிப்படை மருத்துவ உதவிகளை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று ‘சுவ செரிய’ அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன், சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவ அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இத்திட்டம் இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு மற்றும் பிற முக்கிய நகர்ப்புறங்கள் இதனைச் செயல்படுத்துவதற்கான ஆரம்பகட்ட இடங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.














