இலங்கையின் பழம்பெரும் பாடகி கலாநிதி நந்த மாலினி தனது 82 ஆவது வயதில் கொழும்வு, நாவலவில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (20) காலமானார்.
1943-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் திகதி பிறந்த நந்த மாலினி, சுமார் ஏழு தசாப்தங்கள் நீடித்த தனது கலைப்பயணத்தின் மூலம் இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் செல்வாக்கு மிக்க பாடகிகளில் ஒருவராகத் திகழ்ந்தார்.
சமூகப் பிரச்சினைகள், மனித உறவுகள் மற்றும் அன்றாட வாழ்க்கை ஆகியவற்றை ஆராயும் பாடல்களுக்காக அறியப்பட்ட அவர், இலங்கை இசையில் ஒரு வரையறுக்கும் குரலாக இவர் திகழ்ந்தார்.
மேலும், சமூக அநீதி மற்றும் பிற பிரச்சினைகளைக் கையாள்வதற்காகத் தனது கலையைப் பயன்படுத்தியதற்காகப் பரவலாக அங்கீகரிக்கப்பட்டார்.
ஜனாதிபதியின் இரங்கல்
நந்த மாலினியின் மறைவுக்கு ஜனாதிபதி தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ள இரங்கள் செய்தியில்,
நமது காலத்தின் உண்மையான இசை மேதையான நந்த மாலினியின் மறைவு எனக்கு ஆழ்ந்த துயரத்தை அளிக்கிறது.
காலத்தால் அழியாத அவரது இசை, இளம் மற்றும் முதியோர் எனப் பல தலைமுறை இலங்கை மக்களை ஊக்கப்படுத்தியது.
அவரது சிறப்பான கலைப் பாரம்பரியம் இலட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும்.
அவரது குடும்பத்தினர், அன்புக்குரியவர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் – என்று குறிப்பிட்டுள்ளார்.
தேசிய துக்க தினம்
நந்த மாலினியின் மறைவை முன்னிட்டு, இன்று முதல் மூன்று நாட்களுக்குத் தேசிய துக்க அனுசரிப்பு கடைப்பிடிக்கப்படும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஆகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் இலங்கையில் தேசிய துக்க நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இறுதிச் சடங்குகள்
நந்த மாலினியின் பூதவுடல், பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, நுகேகொடை, நவால வீதி, விஜயபா மாவத்தையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று (21) காலை 10.00 மணி முதல் நாளை (22) பிற்பகல் 3.30 மணி வரை வைக்கப்படவுள்ளது.
நாளை பிற்பகல் 3.30 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, அவரது பூதவுடல் தகனம் செய்வதற்காக பொரளை மயானத்திற்குக் கொண்டு செல்லப்படும்.
அவரது இறுதி விருப்பத்திற்கிணங்க, பொரளை மயானத்தில் நாளை மாலை 5 மணிக்கு, எவ்வித ஆடம்பரமான இறுதிச் சடங்குகளும் இன்றி இறுதி நிகழ்வுகள் நடைபெறும்.














