நாடு முழுவதும் எட்டு மாவட்டங்கள் எல் நினோ (El Niño) நிகழ்வினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அந்த எட்டு மாவட்டங்களிலும் உள்ள 36 பிரதேச செயலகப் பிரிவுகள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளன.
எல் நினோ சூழலால் 47,368 குடும்பங்களைச் சேர்ந்த 154,167 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதன் தாக்கத்தால், 35 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குக் குடிநீர் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகளையும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி, 40,945 குடும்பங்களைச் சேர்ந்த 1,32,748 பேருக்குக் குடிநீர் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கிணங்க, மொனராகலை மாவட்டத்திற்கு அதிக அளவிலான குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.
அங்கு எட்டு பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 13,139 குடும்பங்களைச் சேர்ந்த 42,429 பேருக்கு நீர் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எட்டு பிரதேச செயலாளர் பிரிவுகளில், 11,142 குடும்பங்களைச் சேர்ந்த 33,394 பேருக்குக் குடிநீர் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளில், பாதிக்கப்பட்ட 3,794 குடும்பங்களைச் சேர்ந்த 12,047 பேருக்குக் குடிநீர் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.













