பிடியாணை உத்தரவுக்கு அமைவாக கைது செய்யப்பட்ட பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை, நாளை (5) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன், ஞானசார தேரரை நாளை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் அவர் இன்று (4) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றில் ஆஜராகாமல் தொடர்ந்து தவிர்த்து வந்த ஞானசார தேரர் களுத்துறை, பிட்டிகல, இஹலஹேரஸ்ஸ, தீனியாவல பகுதியில் அமைந்துள்ள லேனகிரிய ஆரண்ய சேனாசனம் எனும் ஆசிரமத்தில் மறைந்திருந்த நிலையிலேயே கொழும்பு, குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று (03) கைது செய்யப்பட்டார்.
இஸ்லாம் மார்க்கத்தையும் திருக்குர்ஆனையும் இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்த குற்றச்சாட்டில் சட்ட மாஅதிபரினால் தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகலவினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
அத்துடன், ஞானசார தேரருக்கு முன்னர் வழங்கப்பட்ட ஜனாதிபதியின் பொது மன்னிப்பை இரத்து செய்து, அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு சட்டமா அதிபர் தாக்கல் செய்த மனுவை அடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றமும் திறந்த பிடியாணை பிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.













