23 இந்தியக் கப்பல் பணியாளர்களைக் கொண்ட, லைபீரியக் கொடியை ஏந்திய எண்ணெய்க் கப்பல் ஒன்று, ரஷ்யாவின் கருங்கடல் கடற்கரைப் பகுதியில் ட்ரோன் படகுகளின் தாக்குதலுக்கு உள்ளானதாக மொஸ்கோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்படி, கப்பல் குழுவினர் காப்பாற்றப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக ரஷ்யப் போக்குவரத்து அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் அரசுக்குச் சொந்தமான TASS செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
முதற்கட்டத் தகவல்களின்படி, தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் இருந்த 23 இந்தியக் குழுவினரும் காப்பாற்றப்பட்டதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள ரஷ்யாவின் பிரபலமான சுற்றுலா நகரமான சோச்சிக்கு (Sochi) அருகே இச்சம்பவம் நிகழ்ந்தது.
தொடரும் ரஷ்யா-உக்ரைன் மோதலால் வணிகக் கப்பல்கள் மற்றும் துறைமுகக் கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், உலகளாவிய வர்த்தகத்தில் மிக முக்கியமான ஒரு மையப் புள்ளியாகத் திகழும் கருங்கடல் பகுதி கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது.
கருங்கடலில் துருக்கியைச் சேர்ந்த சரக்குக் கப்பல் ஒன்றின் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் ஏற்பட்ட தீ விபத்தில், குறைந்தது இருவர் உயிரிழந்தும், ஒரு இந்தியர் உட்படப் பணியாளர்கள் சிலர் காயமடைந்தும் இரண்டு நாட்கள் ஆன நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.













