மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அவுட்லுக், டீம்ஸ் உள்ளிட்ட முக்கிய இணையச் சேவைகள் இந்தியா உட்பட உலகின் பல பகுதிகளில் முடங்கியுள்ளதால் பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை முதல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அவுட்லுக் மின்னஞ்சல் சேவை, மைக்ரோசாஃப்ட் 365, டீம்ஸ், மைக்ரோசாஃப்ட் ஸ்டோர் மற்றும் செயற்கை நுண்ணறிவு சேவையான கோபைலட் உள்ளிட்டவற்றை அணுகுவதில் பயனர்கள் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
இணையச் சேவைகளின் செயல்பாட்டு நிலை குறித்து தகவல்களை வழங்கும் டவுன்டிடெக்டர் தளத்திலும் மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடங்கியுள்ளதாகப் பயனர்கள் முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சேவைகளை வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சேவையகப் பாதிப்பு, அதிகப்படியான பயன்பாட்டுச் சுமை மற்றும் தானியங்குச் சோதனையின்போது ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இந்தத் தடங்கல் ஏற்பட்டிருக்கலாம் என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பாதிப்புக்கான காரணத்தைக் கண்டறிந்து சேவைகளை மீளமைப்பதற்கான பணிகளில் தமது நிபுணர் குழு ஈடுபட்டுள்ளதாகவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

















