இந்தியத் திரையுலகில் வசூல் வேட்டையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான ‘இராமாயணா: ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’ திரைப்படம்.
தீபாவளியை முன்னிட்டு கடந்த 6ஆம் திகதி வெளியான இந்தத் திரைப்படம், வெறும் எட்டு நாட்களில் உலகளாவிய ரீதியில் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளது.
இதன் மூலம், உலகளவில் 1,000 கோடி ரூபாய் வசூலைக் கடந்த 11ஆவது இந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, ரவி துபே மற்றும் யாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை, ஏற்கனவே ‘தங்கல்’ திரைப்படத்தின் மூலம் 1,000 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்த இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கியுள்ளார்.
இந்தியாவில் அனைத்து மொழிகளையும் சேர்த்து இதுவரை 675.05 கோடி ரூபாய் வசூலித்துள்ளதுடன், வெளிநாடுகளில் 358.50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இதன்படி, இப்படத்தின் மொத்த உலகளாவிய வசூல் 1,033.55 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும், இந்தியாவில் மட்டும் 560 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ள இந்தத் திரைப்படம், ஷாருக்கானின் ‘பதான்’ மற்றும் ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ ஆகிய திரைப்படங்களின் உள்நாட்டு திரையரங்கு வசூல் சாதனைகளையும் முறியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, இந்தியத் திரைப்பட வரலாற்றில் மிகக் குறுகிய காலத்தில் 1,000 கோடி ரூபாய் வசூலைக் கடந்த மூன்றாவது திரைப்படம் என்ற சாதனையையும் ‘இராமாயணா’ பதிவு செய்துள்ளது.
இதற்கு முன்னதாக ‘புஷ்பா 2: தி ரூல்’ மற்றும் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ஆகிய திரைப்படங்கள் ஏழு நாட்களிலேயே இந்த வசூல் மைல்கல்லை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















