பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இதன்படி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இதற்கமைய தற்போது பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வெற்றி இலக்கை எட்டுவதற்கு 285 ஓட்டங்கள் மேற்கிந்திய தீவுகள் அணி பின்னிலையில் உள்ளது.
ஆட்டநேர முடிவில், போனர் 15 ஓட்டங்களுடனும் கெய்ல் மேயர்ஸ் 37 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
சட்டோகிராம் மைதானத்தில் கடந்த புதன்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 430 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மெயிடி ஹசன் 103 ஓட்டங்களையும் சகிப் ஹல் ஹசன் 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், வோரிக்கன் 4 விக்கெட்டுகளையும் கோர்ன்வோல் 2 விக்கெட்டுகளையும் ரோச், கெப்ரியல் மற்றும் போனர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 259 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கிரைஜ் ப்ரெத்வெயிட் 76 ஓட்டங்களையும் பிளக்வுட் 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், மெயிடி ஹசன் 4 விக்கெட்டுகளையும் முஷ்டபிசுர் ரஷ்மான், தைஜூல் இஸ்லாம் மற்றும் நயீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தொடர்ந்து 171 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பங்களாதேஷ் அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ஓட்டங்களை பெற்றிருந்தபோது தனது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 395 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொமினுல் ஹக் 115 ஓட்டங்களையும் லிடொன் தாஸ் 69 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், கோர்ன்வோல் மற்றும் வோரிக்கன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கெப்ரியல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 395 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, இன்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில், கிரைஜ் பிரத்வெயிட் 20 ஓட்டங்களுடனும் ஜோன் கெம்பல் 23 ஓட்டங்களுடனும் மோஸ்லீ 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், மெயிடி ஹசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இன்னமும் ஒருநாள் மற்றும் 7 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இறுதிநாளான நாளை, மேற்கிந்திய தீவுகள் அணி, துடுப்பெடுத்தாடவுள்ளது.