வளைகுடா நாடுகளில் முதன்முறையாக ஐக்கிய அரபு இராச்சியம் அனுப்பிய ‘நம்பிக்கை’ என்ற விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய்க் கிரகத்தைச் சென்றடைந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 19ஆம் திகதி ஜப்பானின் தானேகஷிமா விண்வெளி மையத்திலிருந்து ஹெச்-2ஏ ரொக்கெற் மூலம் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
‘அல் அமால்’ என அரபு மொழியில் பெயரிடப்பட்ட (தமிழில் நம்பிக்கை என பொருள்படும்) இந்த விண்கலம், 1.3 தொன் எடை கொண்டதாகும்.
இந்நிலையில், குறித்த விண்கலம் 201 நாட்களில் 49 கோடியே 50 இலட்சம் கிலோமீற்றர் தூரம் விண்வெளியில் பயணித்து 2021, பெப்ரவரி ஒன்பதாம் திகதி செவ்வாய்க் கிரகத்தைச் சென்றடைந்தது.
ஐக்கிய அரபு இராச்சியம் உருவாகி, 2021ஆம் ஆண்டுடன் 50 ஆண்டுகள் ஆகின்ற நிலையில், அதன் நினைவாக இந்த ‘நம்பிக்கை’ என்ற விண்கலம் செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
செவ்வாய்க் கிரகத்தின் சுற்றுப் வட்டப்பாதைக்குள் நுழைவதற்கு விண்கலத்தின் பிரதான இயந்திரங்கள் ஏறக்குறைய 27 நிமிடங்கள் தொடர்ந்து இயங்கி நீள்வட்டப் பாதைக்குள் வெற்றிகரமாகச் சென்று இலக்கை அடைந்துள்ளது.
இதையடுத்து, 11 நிமிடங்கள் கழித்து செவ்வாய்க் கிரகத்திலிருந்து சமிக்ஞையை பூமிக்கு அனுப்பியுள்ள நிலையில், ஐக்கிய அரபு இராச்சிய விஞ்ஞானிகள் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர்.
விண்கலத் திட்டத்துக்காக ஐக்கிய அரபு இராச்சிய அரசு 20 கோடி அமெரிக்க டொலரைச் செலவிட்டுள்ளதுடன் 135 பொறியாளர்களின் கடின உழைப்பின் பயனாக ஏறக்குறைய ஆறு ஆண்டுகளில் இந்த விண்கலம் பயணத்துக்குத் தயாரானது.
வழக்கமாக செவ்வாய் கிரகத்துக்கான விண்கலத்தைத் தயார் செய்ய 10 முதல் 12 ஆண்டுகள் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளால் அனுப்பப்பட்டுள்ள விண்கலங்களும் செவ்வாய்க் கிரகத்துக்கு அருகில் சென்றுள்ளன.
இந்நிலையில், சீனாவின் விண்கலம் இன்று அல்லது நாளை செவ்வாய்க் கிரகத்தின் நீள்வட்டப் பாதைக்குள் நுழையும் எனவும் அமெரிக்காவின் விண்கலம் அடுத்தவாரத்தில் இந்த இலக்கை அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.