ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிஸாதே கொலையில் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரே ஈடுபட்டிருந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
பக்ரிஸாதே மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதலில் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் ஈடுபட்டதாகவும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் ஈரான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மொஹ்சென் பக்ரிஸாதே, ஈரானின் அணுவாயுத ஆராய்ச்சியின் மூளையாகச் செயற்பட்டு வந்த நிலையில், ‘அணுகுண்டின் தந்தை’ என ஈரான் நாட்டு மக்களால் அவர் அழைக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த நவம்பரில் ஈரான் தலைநகர் தெஹ்ரானின் கிழக்குப் பகுதியில் இருந்து 40 கிலோமீற்றர் தூரத்தில் புறநகர்ப் பகுதி வழியாக காரில் சென்றபோது, அங்கு பதுங்கியிருந்த குழுவால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நிலையில், பக்ரிஸாதே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தக் கொலையில் இஸ்ரேல் ஈடுபட்டிருப்பதாக ஈரான் தரப்பு தொடர்ந்து கூறிவந்ததுடன் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஈரான் தெரிவித்தது.
இந்நிலையில், பக்ரிஸதே கொலையில் இராணுவத்தைச் சேர்ந்தவருக்கு தொடர்பிருப்பதாக ஈரான் தெரிவித்துள்ள நிலையில், இதற்கு இஸ்ரேல் தரப்பில் எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.