ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.
கடினத்தரையில் நடைபெறும் இத்தொடரில் தற்போது மூன்றாவது சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் ஆண்களுக்கான மூன்றாவது சுற்றுப் போட்டியில், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், ஸ்பெயினின் பப்லோ கரேனோ புஸ்டாவை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை டிமிட்ரோவ், 6-0 என எளிதாக கைப்பற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், டிமிட்ரோவ் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றிருந்த போது பப்லோ கரேனோ புஸ்டா, உபாதைக் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறினார். இதனால் டிமிட்ரோவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
இன்னொரு ஆண்களுக்கான மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில், ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், பிரான்ஸின் அட்ரியன் மன்னாரினோவுடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், 6-3, 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.
இதேபோல பெண்களுக்கான மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ரஷ்யாவின் அனஸ்தேசியா பொட்டபோவாவை எதிர்த்து விளையாடினார்.
எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், செரீனா வில்லியம்ஸ், 7-6, 62 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.
மற்றொரு பெண்களுக்கான மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில், ஜப்பானின் நவோமி ஒசாகா, துனிசியாவின் ஒன்ஸ் ஜாபூரை எதிர்கொண்டார்.
இப்போட்டியில், நவோமி ஒசாகா, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றார்.