நியூசிலாந்திலும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
தீவு நாடான நியூசிலாந்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஆக்லாந்தில் 3ஆம் கட்ட ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.
இந்த 3ஆம் நிலை ஊரடங்கு கட்டுப்பாடுகளின்படி, மக்கள் அனைவரும் வீட்டுக்குள் இருக்க வேண்டும். அத்தியாவசிய பணிகள் மற்றும் பொருட்களை வாங்க மட்டுமே வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே கொரோனாவை கட்டுப்படுத்த நியூசிலாந்து மேற்கொண்ட அதே முயற்சிகளை தீவிரமாக மேற்கொள்ளவிருப்பதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது
இந்த நிலையில் நியூசிலாந்தில் புதிய வகை கொரோனா தொற்று உள்ளதா என ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இறுதியில் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்தபோதிலும் சிறிய தீவு நாடான நியூசிலாந்து வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவந்து கொரோனா இல்லாத நாடாக உருவெடுத்தது.
அதன்பின்னர் வெளிநாட்டில் இருந்து கொரோனாவுடன் வந்தவர்களையும் சரியாக கையாண்டு பிரதமர் ஜெசிந்தா தலைமையிலான நியூசிலாந்து அரசு நோய் பரவலைத் தடுத்தது.
கொரோனாவை சிறப்பாக கையாண்ட காரணத்தால் பிரதமர் ஜெசிந்தா பொதுத்தேர்தலிலும் வெற்றிபெற்று மீண்டும் பிரதமரானார்.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து நியூசிலாந்தில் உள்நாட்டுக்குள் கொரோனா பரவல் இல்லாத நிலை நீடித்தது.
இந்த நிலையிலேயே, அங்கு உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.