கொரோனா தொற்று பரவலின் ஆரம்ப இடம் குறித்த தகவலை சீனா வெளியிட வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக அமெரிக்காவும் இந்த கோரிக்கையை விடுத்திருந்த நிலையில் பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ராப், இந்த விடயத்தில் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழு, சீனாவின் வூஹான் நகருக்குச் சென்று தொற்று தொடர்பாக ஆராயும்போது அந்தக் குழுவுக்குச் சீனாவில் எந்த அளவு சுதந்திரம் வழங்கப்பட்டது என்பது குறித்து அவர் கவலை வெளியிட்டார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழுவுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட்டதா என்றும் அவர்களின் கேள்விக்கு விடை கிடைத்ததா என்றும் பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ராப் கேள்வி எழுப்பினார்.
சீனாவில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் பற்றிய மூலத் தகவல்களுக்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட நோயாளிகளின் தகவல் தொகுப்பே தங்களுக்கு வழங்கப்பட்டதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழுவின் உறுப்பினர்கள் சிலர் முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.