கினியா வளைகுடாவில் கடந்த மாதம் கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட பதினைந்து துருக்கிய மாலுமிகள் துருக்கிக்குத் திரும்பியுள்ளனர்.
நைஜீரியாவில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு திரும்பிய அவர்களை, துருக்கிய வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.
குறித்த மாலுமிகள், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நைஜீரியாவில் விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தாயகம் திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், தாங்கள் கடத்தப்பட்டிருந்த மூன்று வாரங்களில் மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும், எனினும், உடல் ரீதியாக தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மாலுமிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தாம் காட்டுப் பகுதியில் தடுத்துவைக்கப்பட்டதாகவும் தம்மைச் சுற்றி ஆயுதமேந்தியவர்கள் காண்காணிப்பில் இருந்ததாகவும் மாலுமிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நைஜீரியாவின் லாகோஸிலிருந்து தென்னாபிரிக்காவின் கேப் டவுனுக்கு லைபீரியன் கொடி ஏற்றப்பட்ட கொள்கலன் கப்பல், கடந்த ஜனவரி 23ஆம் திகதி சாவோ டோம் தீவில் இருந்து 160 கிலோமீற்றர் (100 மைல்) தொலைவில் கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.