இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 342 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 200 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அவர்களில் 86 ஆயிரத்து 759 பேர் தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 895 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேநேரம், கொரோனா தொற்று சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் 383 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் மேலுமொரு உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மெதிகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய பெண்ணொருவர் மார்ச் 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
கொரோனா நிமோனியா நிலையே மரணத்திற்கான காரணமென அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 546ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை சீனாவில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையை விடவும் அதிகரித்துள்ளது.
அதற்கமைய சீனாவில் இதுவரையில் 90 ஆயிரத்து 99 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் 90 ஆயிரத்து 200 பேருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை சீனாவைப் பின்தள்ளி 87ஆவது இடத்திலும் சீனா 88ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.