மாகாண சபைத் தேர்தல் கடந்த மூன்று வருடங்களாக வெறும் பேசுப்பொருளாகவே உள்ளது. ஆகவே அவ்விடயத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் விரைவான தீர்மானத்தை எடுக்க வேண்டுமென சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
மாகாண சபை தேர்தல் விவகாரம் தொடர்பாக அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீனிடம் எமது செய்தி பிரிவு தொடர்புகொண்டு வினவியப்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மனாஸ் மக்கீன் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையிலுள்ள 9 மாகாண சபைகளினதும் உத்தியோகப்பூர்வ கால எல்லை நிறைவுக்கு வந்து பல வருடங்களை கடந்துள்ளது.
அதாவது மேல் மாகாணம், மத்திய மாகாணம், தென் மாகாணம் , வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம், வடமேல் மாகாணம், வடமத்திய மாகாணம், ஊவா மாகாணம், சப்ரகமுவ மாகாணம் ஆகியற்றின் கால எல்லைகள் நிறைவுக்கு வந்துள்ளன.
இந்நிலையில் குறித்த தேர்தலினை நடத்துவது தொடர்பாக ஒழுங்கான கருத்துக்களை அரசாங்கம் முன்வைக்காமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்ககூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களே மாகாண சபைத்தேர்தல் தொடர்பாக முரண்பாடான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மகாகாண சபை முறைமை இலங்கை தேர்தல் முறையில் இருக்கின்றப்போது, இந்த தேர்தலை பல வருட காலமாக நடத்தாமல் இருப்பது ஜனநாயகத்தை கேள்விக்கு உள்ளாக்கும் விடயமாகும்.
எனவே இந்த மாகாண சபை தேர்தல் தொடர்பாக விரைவான தீர்மானத்தை எடுப்பது, ஜனாதிபதி மற்றும் பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் முக்கிய பொறுப்பாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.